

லிஸ்பன்: 'உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி' எனச் சொல்லி அண்மையில் பிறந்த தனது மகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் பதிவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கால்பந்தாட்ட உலகில் அதிக கோல்களை பதிவு செய்தவர் போர்ச்சுகல் நாட்டு வீரர் ரொனால்டோ. தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 37 வயதான அவருக்கு ஆறு குழந்தைகள். இதில் அண்மையில் அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண், ஒரு பெண் என பிறந்த அந்த இரட்டையர்களில் ஆண் குழந்தை பிரசவத்தின் போதே உயிரிழந்திருந்தது.
அது குறித்த செய்தியையும் ரொனால்டோ பகிர்ந்திருந்தார். இந்நிலையில், பிறந்த தனது மகளின் படத்தை முதல்முறையாக பகிர்ந்துள்ளார் ரொனால்டோ. அதில் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கிறார். அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் உள்ளார்.
"ஜியோவும், எங்கள் மகளும் வீடு திரும்பியுள்ளனர். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், அரவணைப்புக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவு இந்நேரத்தில் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்" என தெரிவித்துள்ளார் ரொனால்டோ.
முன்னதாக ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்து அவரை தேற்றும் விதமாக லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இடையிலான போட்டியில் ரசிகர்கள் கர ஒலி எழுப்பியதோடு, பாடலும் பாடியிருந்தனர் . அதற்கு ரொனால்டோ தனது நன்றியை தெரிவித்திருந்தார்.