Published : 22 Apr 2022 10:46 AM
Last Updated : 22 Apr 2022 10:46 AM
மும்பை: 'உங்கள் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா.
நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வீரர்களில் பிரதான வீரராக ஜொலிக்கிறார் தோனி. 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் சந்தித்த கடைசி 4 பந்துகளில் மட்டும் 16 ரன்களை எடுத்து அசத்தினார். அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதில் ஒருவராக இணைந்துள்ளார் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே கேப்டனாக தோனி செயல்பட்ட காலத்தில் அவரது படைத் தளபதியாக விளங்கியவர் ரெய்னா.
"மும்பை மற்றும் சென்னை அணி விளையாடிய இந்தப் போட்டி நடப்பு தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று. அணிக்கு தேவையான இன்னிங்ஸை விளையாடியுள்ளார் நமது தோனி பாய். எப்போதும் உங்களது ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடி இருந்தீர்கள். மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள சிஎஸ்கே-வுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார் ரெய்னா.
நடப்பு சீசனில் மெகா ஏலத்திற்கு முன்னதாக 12 கோடி ரூபாய்க்கு தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது சிஎஸ்கே. இதுவரை இந்த 7 ஆட்டத்தில் விளையாடியுள்ள தோனி 120 ரன்களை சேர்த்துள்ளார். நான்கு முறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியன் திரும்பியுள்ளார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!