

தைவான் நகரில் நடைபெற்ற திறந்தவெளி தடகள போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் நேற்று முன்தினம் இந்தியாவின் டுட்டி சந்த் தங்கப் பதக்கம் வென்றார்.
அவர் பந்தய தூரத்தை 11.50 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இந்த போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றாலும் அது ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற போதுமானதாக இல்லை. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் பந்தய தூரத்தை 11.32 விநாடிகளில் கடந்திருக்க வேண்டும்.
இந்த போட்டிக்கு டுட்டி சந்த் தயாராக போதிய அவகாசம் கிடைக்கவில்லை. பெய்ஜிங்கில் போட்டியில் கலந்து கொண்ட அவர் அங்கிருந்து விமானம் மூலம் தைவானுக்கு புறப்பட்டார். சுமார் 1 மணி நேர பயணத்துக்கு பிறகு தைவான் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் மைதானத்தை சென்றடைய மேலும் 1 மணி நேரம் ஆனது. அடுத்த 1 மணி நேரத்தில் அவர் அவசர அவசரமாக தயாராகி களத்தில் ஓடத் தொடங்கினார்.
சிறிது கூடுதல் காலஅவகாசம் கிடைத்திருந்தால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர் எட்டிப்பிடித் திருக்கக் கூடும் என அவரது பயிற்சியாளர் ரமேஷ் தெரிவித்தார்.
டுட்டி சந்துக்கு இன்னும் இரு வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட நேரத் துக்குள் பந்தய தூரத்தை கடந் தால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
2-வது தங்கம்
இதற்கிடையே நேற்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்திலும் டுட்டி சந்த் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 23.52 விநாடிகளில் கடந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரபானி நந்தா வெள்ளிப் பதக்கமும், ஜோதி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். இவர்கள் 3 பேரும் அடங்கிய இந்திய அணி 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.