Published : 21 Apr 2022 11:32 PM
Last Updated : 21 Apr 2022 11:32 PM

IPL 2022 | பினிஷர் தோனி... கடைசி பந்தில் சென்னைக்கு கிடைத்த வெற்றி

மும்பை: ஐபிஎல் 15வது சீஸனின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரின் முதல் பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக மும்பையின் பவுலிங் ஸ்பெல்லை தொடங்கிய டேனியல் சாம்ஸ் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் ஆனார். மிட்சல் சான்ட்னர் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இரண்டு பவுண்டர்களை விளாசி சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அதை நீடிக்கத் தவறினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் சாம்ஸ் பந்தில் அவுட் ஆக, அம்பதி ராயுடுவுடன் கூட்டணி அமைத்தார் ராபின் உத்தப்பா. இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினர்.

30 ரன்கள் எடுத்திருந்த ராபின் உத்தப்பா விக்கெட்டை உனட்கட் வீழ்த்த, அடுத்து வந்த கேப்டன் ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். துபே 13 ரன்களும், ஜடேஜா மூன்று ரன்களும் எடுத்தனர். சிறிதுநேரத்தில் பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடுவும் 40 ரன்களுக்கு நடையைக்கட்டினார். மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் சரிவால் சென்னை அணி தடுமாறியது. ஒருகட்டத்தில் 12 பந்துகளில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

பும்ரா ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் சேர்த்து 11 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இறுதிஓவரை உனட்கட் வீசினார். முதல் பந்தே டுவைன் பிரிட்டோரியஸை அவுட் ஆக்கினார். மூன்றாவது பந்தில் சிக்ஸும், நான்காவது பந்தில் பவுண்டரியும் அடித்த தோனி, ஒரு பந்தில் 4 ரன்கள் என்ற தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து மீண்டும் சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்தார். இதனால் கடைசி பந்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.

மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 7வது தோல்வியாகும். அதேநேரம் சென்னை அணி இரண்டாவது வெற்றியை பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இணை மும்பைக்கு தொடக்கம் கொடுத்தது. ஆனால் அது அந்த அணிக்கு மோசமாக தொடக்கமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும், முகேஷ் சௌத்ரி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். ரன் எதுவும் எடுக்காமல் இருவரும் நடையைக் கட்டினர்.

அடுத்து, வந்த டெவால்ட் ப்ரீவிஸூம் 4 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் நிலைத்து ஆடிய சூர்யகுமார் யாதவை 7-வது ஓவரில் மிட்செல் சான்ட்னர் வீழ்த்தினார். அவர் 21 பந்துகளில் 32 ரன்களை சேர்த்திருந்தார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 56 ரன்களை சேர்த்திருந்தது.

சூர்யகுமார் யாதவ் விட்டுச் சென்ற இடத்தை திலக் வர்மா நிரப்பினார். அவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட, மறுபுறம் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹிருத்திக் ஷோக்கீன் 25 ரன்களிலும், பொல்லார்டு 14 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 5 ரன்களிலும் நடையைக் கட்டினர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 155 ரன்களை சேர்த்தது. திலக் வர்மா 51 ரன்களுடனும், ஜெயதேவ் உனட்கட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்சல் சாட்னர், மஹீஷ் தீக்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x