

மும்பை: சென்னை அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 155 ரன்களை சேர்த்தது. திலக் வர்மா 43 பந்துகளில் 51 ரன்களை குவித்து அணிக்கு பலமாக திகழ்ந்தார்.
15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 33-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இணை மும்பைக்கு தொடக்கம் கொடுத்தது. ஆனால் அது அந்த அணிக்கு மோசமாக தொடக்கமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும், முகேஷ் சௌத்ரி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். ரன் எதுவும் எடுக்காமல் இருவரும் நடையைக் கட்டினர்.
அடுத்து, வந்த டெவால்ட் ப்ரீவிஸூம் 4 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் நிலைத்து ஆடிய சூர்யகுமார் யாதவை 7-வது ஓவரில் மிட்செல் சான்ட்னர் வீழ்த்தினார். அவர் 21 பந்துகளில் 32 ரன்களை சேர்த்திருந்தார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 56 ரன்களை சேர்த்திருந்தது.
சூர்யகுமார் யாதவ் விட்டுச் சென்ற இடத்தை திலக் வர்மா நிரப்பினார். அவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட, மறுபுறம் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹிருத்திக் ஷோக்கீன் 25 ரன்களிலும், பொல்லார்டு 14 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 5 ரன்களிலும் நடையைக் கட்டினர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 155 ரன்களை சேர்த்தது. திலக் வர்மா 51 ரன்களுடனும், ஜெயதேவ் உனட்கட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்சல் சாட்னர், மஹீஷ் தீக்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.