

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் நடுவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த். சிறு தவறுகள், பெரிய எதிர்வினைகளைக் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நடப்பு சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் டெத் ஓவரின்போது அம்பயர் மேற்கொண்ட தவறான முடிவை கண்ட கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸின் 19-வது ஓவரை பெங்களூரு பவுலர் ஹேசல்வுட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை அவர் வொய்ட் (Wide) லைனுக்கு (Tramline) வெளியே செல்லும் வகையில் சற்றே அகலமாக வீசியிருந்தார். இருந்தாலும் அதனை வொய்ட் என அறிவிக்க மறுத்தார் கள நடுவர். அதனைப் பார்த்து ஸ்ட்ரைக்கில் இருந்த ஸ்டாய்னிஸ் விரக்தி அடைந்தார். பந்து வீசுவதற்கு முன்னர் ஸ்டாய்னிஸ் நகர்ந்து வந்த காரணத்தால், அவர் விளையாட முடியாத வகையில் பந்தை சற்றே அகலமாக வீசியிருந்தார் ஹேசல்வுட்.
அதனைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் விரக்தியும் அடைந்திருந்தனர். அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்திருந்தார் ஸ்டாய்னிஸ். கிட்டத்தட்ட ஆட்டத்தின் முடிவை அது மாற்றியதாகவே சொல்லப்பட்டது.
"ஐபிஎல் களத்தில் அம்பயரிங் விவகாரத்தில் என்ன நடக்கிறது. இதைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக உள்ளது. சிறு தவறுகள் பெரிய எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும். இனியாவது சுதாரித்துக் கொண்டு முறையாக அம்பயரிங் செய்ய தெரிந்தவர்களை நியமியுங்கள்" என இந்தப் போட்டியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் ஸ்ரீகாந்த்.
முன்னதாக, நடப்பு சீசனில் மூன்றாவது அம்பயரின் முடிவுகள் சில சர்ச்சையை எழுப்பி இருந்தது. அப்போது ஐஸ்லாந்து கிரிக்கெட் கிரிக்கெட் அதனை ட்ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.