Published : 19 Apr 2022 06:08 AM
Last Updated : 19 Apr 2022 06:08 AM

டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்

வேதாந்த்

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 800 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் வேதாந்த், பந்தய தூரத்தை 8:17.28 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். கடந்த சனிக்கிழமை நடந்த 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

வேதாந்த், தங்கப் பதக்கம் வென்ற பரிசளிப்பு வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன் அதில், ‘‘தங்கப் பதக்கம், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் மிகப் பெரிய ஆசீர்வாதத்துடனும் வேதாந்தின் வெற்றி தொடர்கிறது. பயிற்சியாளர் பிரதீப்குமார் மற்றும் இந்திய நீச்சல் கூட்டமைப்பு அளித்த ஆதரவுக்கு நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

வேதாந்த், கடந்த ஆண்டு நடந்த லத்வியா ஓபனில் வெண்கலப் பதக்கமும், அதே ஆண்டில் நடந்த ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 4 வெள்ளி, 3 வெண்கலபதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x