

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்களை குவித்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 103 ரன்களை குவித்தார்.
15-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு தேவ்தத் படிக்கல், ஜாஸ் பட்லர் இணை துவக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த இணையை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
ஒருவழியாக 9-வது ஓவரில் 18 ரன்கள் எடுத்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த தேவ்தத் படிக்கலை சுனில் நரேன் போல்டாக்கி வெளியேற்றினார். அடுத்தாக களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன் பட்லருடன் கைகோத்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த 15-வது ஓவரில் 1 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி 163 ரன்களை சேர்த்தது. ஒருபுறம் பட்லர் ஆடி 55 பந்துகளில் 90 ரன்களை குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
18 பந்துகளில் 38 ரன்களை எடுத்திருந்த சஞ்சு சாம்சன் ரஸ்ஸல் பந்தில் விக்கெட்டாகி வெளியேறினார். இதையடுத்து பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கேட்சாகி அதுவரை அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பட்லர் 61 பந்துகளில் 103 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரியான் பராக் 5 ரன்களில் நடையைக் கட்டினார். கருண் நாயரும் பெரிய அளவில் ரன்கள் எதும் சோபிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது.
ஹெட்மேயர் 26 ரன்களுடனும், ரவிசந்திரன் அஸ்வின் 2 ரன்களுடனும் களத்தில் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். கொல்கத்தா அணி தரப்பில், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும், ரஸல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.