

சசெக்ஸ்: இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 'கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2' தொடரில் சசெக்ஸ் அணிக்காக இரட்டை சதம் விளாசியுள்ளார் இந்திய வீரர் புஜாரா.
'டெர்பிஷயர்' அணிக்கு எதிரான போட்டியில் சசெக்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கினார் புஜாரா. இதே போட்டியில் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் சசெக்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டிருந்தார். இந்தப் போட்டியில்தான் புஜாரா இரட்டை சதம் விளாசியுள்ளார். இந்தப் போட்டி சமனில் முடிந்துள்ளது. இதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் முகமது அசாருதீனுக்கு பிறகு கவுன்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் புஜாரா.
முதல் இன்னிங்ஸில் புஜாரா 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து அந்த அணி ஃபாலோ-ஆன் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் 387 பந்துகளை எதிர்கொண்டு 201 ரன்கள் சேர்த்தார் புஜாரா. அவரது இன்னிங்ஸில் 23 பவுண்டரிகள் அடங்கும். மொத்தம் 467 நிமிடங்கள் அவர் களத்தில் விளையாடினார்.
"சசெக்ஸ் அணிக்காக எனது முதல் போட்டியை மிகவும் அனுபவித்து விளையாடினேன். அணிக்காக எனது பங்களிப்பை கொடுத்ததில் மகிழ்ச்சி. அடுத்தப் போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளேன்" என புஜாரா தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை மாதம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தப் பயணத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி விளையாட வாய்ப்புள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து மண்ணில் புஜாராவின் கவுன்டி கிரிக்கெட் இரட்டை சதம் அவர் அணிக்குள் மீண்டும் திரும்ப உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.