

குவாஹாத்தி: குவாஹாத்தியிலிருந்து ஷிலாங்குக்கு கார் மூலம் பயணித்தபோது சாலை விபத்தில் சிக்கி இளம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரான விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள பயணித்தபோது இந்த விபத்து நேரிட்டது.
தேசிய நெடுஞ்சாலை 6-இல் இந்த விபத்து ஏற்பட்டது. அவருடன் தமிழக டேபிள் டென்னிஸ் சம்மேளன வீரர்கள் சந்தோஷ் குமார், கிஷோர் குமார், அபினேஷ் ஆகியோர் பயணித்துள்ளனர். அவர்கள் மூவரும் லேசான காயத்துடன் தப்பினர். எதிரே வந்த 12 சக்கரங்கள் கொண்ட லாரி (டிரக்) கட்டுப்பாட்டை இழந்து வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே விஸ்வா உயிரிழந்தார்.
தமிழக வீரர்: 18 வயதான விஸ்வா லயோலா கல்லூரில் முதலாம் ஆண்டு வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது சகோதரி டேபிள் டென்னிஸ் விளையாடி வந்துள்ளார். சிறு வயதில் அதனைப் பார்த்து வளர்ந்த விஸ்வாவுக்கு தானும் தனது சகோதரியை போல டேபிள் டென்னிஸ் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. தனது விருப்பத்தை பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பயிற்சியில் சேர்த்துள்ளனர்.
சென்னை - அண்ணா நகரில் உள்ள கிருஷ்ணசாமி டேபிள் டென்னிஸ் கிளப்பில்தான் விஸ்வா தொழில்முறை விளையாட்டு சார்ந்த பயிற்சி பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளாக அவர் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். ராம்நாத் பிரசாத் மற்றும் ஜெய் பிரபு ராம் ஆகியோர் தான் விஸ்வாவின் பயிற்சியாளர்கள். இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் தான் விஸ்வாவின் ரோல் மாடல்.
ஜூனியர், சப்-ஜூனியர் என ஆரம்பம் முதலே அமர்க்களமாக விளையாடி வந்துள்ளார் விஸ்வா. அதன் பலனாக அவர் பல்வேறு போட்டிகளை வென்றுள்ளார். தேசிய அளவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்.
2018-ல் நாட்டின் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான வீரர்களில் தலைசிறந்த வீரர், 2019-ல் தேசிய அளவிலான ஜூனியர் பட்டத்தையும் வென்றவர் விஸ்வா. இப்படியாக தான் சார்ந்த விளையாட்டில் பட்டங்களையும், பதக்கங்களையும் குவித்து வந்துள்ளார். அது பலரது கவனத்தை அவர் பக்கமாக திரும்ப செய்துள்ளது.
இந்நிலையில், 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக வீரர்களுக்கு இடையே நடைபெற்ற ட்ரையலில் தேர்ச்சி பெற்று போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார் விஸ்வா. ஆனால், அவர் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
RIP விஸ்வா.