ஐபிஎல் களத்தில் நுழைந்த கரோனா: டெல்லி கேபிடல்ஸ் அணி வீரருக்கு தொற்று உறுதி 

ஐபிஎல் களத்தில் நுழைந்த கரோனா: டெல்லி கேபிடல்ஸ் அணி வீரருக்கு தொற்று உறுதி 
Updated on
1 min read

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று குறைந்த வருவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, மும்பை, நவி மும்பை ஸ்டேடியங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அணியின் வீரர்கள் பயோ பபுளில் இருந்து வெளியில் சென்றால், 3 நாட்கள் தனிமையில் இருந்த பிறகுதான் அணியில் சேர முடியும் என்ற விதியும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராபில் ஆன்டிஜென் சோதனையில் இவருக்குத் தொற்று இருப்பதாக முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அணியின் அனைத்து வீரர்களும் தங்களின் அறையிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் விதிமுறைகளின் படி ஆர்டி - பிசிஆர் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடுத்த போட்டி நடைபெறவுள்ள புனேவிற்கு செல்வது தாமதம் ஆகும் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மிகக் குறைந்த கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் நடத்தப்பட்டுவரும் நிலையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in