

மும்பை : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 151 ரன்களை சேர்த்தது.
ஐபிஎல் 15-வது சீசனின் இன்றைய 28-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 3வது ஓவரிலேயே 8 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே 14 ரன்களில் பிரப்சிம்ரன் சிங்கும் வெளியேற 5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 33 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி.
அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 11 ரன்களிலும் வெளியேற, தடுமாற்றத்திலிருந்து அணியின் ஸ்கோரை லியாம் லிவிங்ஸ்டன், ஷாருக்கான் கூட்டணி ஓரளவு உயர்த்தியது. 16-வது ஓவரில் 26 ரன்களில் ஷாருக்கான் வெளியேறினார். அடுத்து வந்த ஓடியன் ஸ்மித் பெரிய அளவில் ரன்கள் சோபிக்கவில்லை. ஒருபுறம் லியாம் லிவிங்ஸ்டன் மட்டும் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். 19-வது ஓவரில் 33 பந்துகளில் 60 ரன்களை குவித்திருந்த லிவிங்ஸ்டனும் பெவிலியன் திரும்பினார். அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை சேர்த்தது..
ஹைதாராபாத் அணி தரப்பில், உம்ரான் மாலிக் தலா 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளையும், நடராஜன், ஜகதீஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.