பெங்களூருவை சமாளிக்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்

பெங்களூருவை சமாளிக்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி இஎஸ்பிஎன் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெங்களூரு அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. 2009 மற்றும் 2011-ல் இறுதிப்போட்டி வரை சென்று பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இம்முறை கேப்டன் கோலி நல்ல பார்மில் உள்ளதால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது.

டி 20 உலகக் கோப்பையில் 273 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற கோலியின் அணியில் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகிய அதிரடி வீரர்களும் உள்ளனர். இந்த பேட்டிங் கூட்டணி எந்தவகை பந்து வீச்சையும் விளாசும் தன்மை கொண்டதாக விளங்கக்கூடும்.

ரூ.9.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வாட்சன் ஆல்ரவுண்டராக அசத்தக்கூடும் என கருதப்படுகிறது. இளம் வீரரான சர்ப்ராஸ் கான், விக்கெட் கீப்பர் டிரெவிஸ் ஹெட், ஸ்டூவர் பின்னி, மந்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்கள். ரிச்சர்ட்சன், ஹர்ஸால் படேல், நாத் அரவிந்த், வருண் ஆரோன் ஆகியோரை கொண்ட வேகப்பந்து வீச்சு கூட்டணி உள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான சாமு வேல் பத்ரி தோள்பட்டை காயத் தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. டி 20 உலகக் கோப்பை சாம்பியான அவர் விளையாடாதது அணிக்கு சற்று பலவீனம் தான்.

பத்ரி விளையாடாத நிலையில் யுவேந்திரா சாஹல், பர்வேஸ் ரசூலை நம்பியே சுழற்பந்து வீச்சு உள்ளது. யுவேந்திரா 2015 சீசனில் 15 விக்கெட்டும், 2014 சீசனில் 14 விக்கெட்டும் கைப்பற்றி யுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 2013ல் பிளே ஆப் சுற்றை எட்டிப்பார்த்துள்ளது. இம்முறை கேப்டன் டேவிட் வார்னர், அனுபவ வீரர் ஆஷிஸ் நெஹ்ரா பலம் சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி 20 உலகக் கோப்பையில் காயம் அடைந்த யுவராஜ் சிங் இருவாரங்களுக்கு பிறகு களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வீரரான அவரது இழப்பு அணிக்கு சற்று பலவீனம் தான். எனினும் மோர்கன், வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் நெஹ்ராவுடன், டிரென்ட் பவுல்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா நெருக்கடி தரக்கூடும். தீபக் ஹூடா, பிபுல் சர்மா, திருமலா ஷெட்டி சுமன் ஆகியோர் பகுதி நேர பந்து வீச்சாளர்களாக செயல்படும் திறன் கொண்டவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in