

மும்பை: நேற்றைய போட்டியில் தங்கள் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டம் கொல்கத்தாவிற்கு நிச்சயம் வலி கொடுத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா.
நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஹைதராபாத் அணி. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது ஹைதராபாத். இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அசத்தியிருந்தார் ஹைதராபாத் வீரர் ராகுல் திரிபாதி. 37 பந்துகளில் 71 ரன்களை அவர் சேர்த்திருந்தார்.
குறிப்பாக கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை திரிபாதி துவம்சம் செய்திருந்தார் . 2020 மற்றும் 2021 சீசன்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் திரிபாதி.
இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து தனது கருத்தை சொல்லியுள்ளார் ஓஜா. "கிரீஸில் திரிபாதி இருந்த வரை ரன் சேர்ப்பதில் மும்முரமாக இருந்தார். அவர் மீது அணி வைத்த நம்பிக்கையை வீண்போகச் செய்யவில்லை. ஏலத்தின் போது திரிபாதியை வாங்க சில அணிகள் முயற்சி செய்தன. இவரை ஆடும் லெவனில் சேர்க்கலாம் என்ற கண்ணோட்டத்தில் அதனை அணிகள் செய்திருக்கலாம். கொல்கத்தா கூட இவரை ஏலத்தில் வாங்கி, வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என நினைக்கலாம். அணியின் முன்னாள் வீரர் திரிபாதியின் அபார ஆட்டம் கொஞ்சம் கொல்கத்தாவுக்கு வலியைக் கொடுத்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார் ஓஜா.
திரிபாதி இதுவரை 67 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1556 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடாத வீரர்களில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற சாதனை இப்போது இவர் வசமே உள்ளது.