IPL 2022 | டெல்லி அணியில் ஒருவருக்கு கரோனா; பெங்களூரு உடனான போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பு

டெல்லி அணி வீரர்கள்
டெல்லி அணி வீரர்கள்
Updated on
1 min read

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியின் முகாமில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருந்தாலும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் பத்து அணி வீரர்களும் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பயோ-பபுளில் இருந்தபடி விளையாடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹாத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் உட்பட அந்த அணியின் வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த அணி இன்று பெங்களூரு அணிக்கு எதிராக லீக் போட்டியில் விளையாட வேண்டியுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டது. முன்னெச்சரிக்கை கருதி டெல்லி அணி வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதில் இரண்டு பரிசோதனையில் டெல்லி வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. மூன்றாவது சுற்று முடிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு பரிசோதனைகள் மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. அதனால் இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்புகள் அதிகம் என பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் கரோனா தொற்று பாதிப்பு சில அணிகளின் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. பிறகு தொடர், பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் எஞ்சியிருந்த போட்டிகள் அனைத்தும் அமீரகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. நடப்பு சீசனில் போட்டிகளை நேரில் காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in