Published : 16 Apr 2022 06:48 AM
Last Updated : 16 Apr 2022 06:48 AM

'கைவசம் விக்கெட்கள் இருந்திருந்தால் இலக்கை துரத்தியிருக்கலாம்' - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

குஜராத் அணியின் வெற்றிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். பேட்டிங்கில் 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார்.

போட்டி முடிவடைந்ததும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது, “குஜராத் அணி கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் சேர்த்தனர். இதற்காக அவர்களது பேட்ஸ்மேன்களை பாராட்டியாக வேண்டும். எங்களிடம் விக்கெட்கள் இருந்திருந்தால் இது துரத்தக்கூடிய இலக்காகவே இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

ரன் ரேட்டை கிட்டத்தட்ட சரியாகவே வைத்திருந்தோம், பவர்பிளேவில் சிறப்பான ரன் ரேட்டை கொண்டிருந்தோம். ஆனால் விக்கெட்களை இழந்துகொண்டே இருந்தோம். போட்டியின் முந்தைய தினம் இரவு பயிற்சியின் போது டிரெண்ட் போல்ட் அசவுகரியத்தை உணர்ந்தார். அதன் காரணமாகவே அவர், களமிறங்கவில்லை. விரைவில் அவர், திரும்பி வருவார் என நம்புகிறேன்” என்றார்.

தீபக் ஷாகர் விலகல்...

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் ஷாகர் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் போது தீபக் ஷாகர் காயம் அடைந்தார்.

இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இந்த மாத இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சையின் போதே அவருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். தீபக் ஷாகரை, சென்னை அணி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்: மும்பை - லக்னோ

நேரம்: பிற்பகல் 3.30

டெல்லி - பெங்களூரு

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x