

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 175 ரன்களை குவித்தது. இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசி ரஸ்ஸல் அதிரடி காட்டினார்.
ஐபிஎல் போட்டியின் இன்றைய 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவும், ஹைதராபாத் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர் தொடங்கினர். முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஆரோன் பின்சை மார்கோ ஜான்சன் வெளியேற்றினார். 7 ரன்களில் நடையைக் கட்டினார் பின்ச். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரை தமிழக வீரர் நடராஜன் போல்டாக்கி 6 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த சுனில் நரேனை சிக்ஸர் விளாசிய கையோடு விக்கெட்டாக்கினார் நடராஜன். அவரைத்தொடர்ந்து 28 ரன்களை சேர்ந்திருந்த ஷ்ரேயாஸ் ஐயரும் நடையைக்கட்டினார்.
ஆரம்பத்திலிருந்தே தடுமாற்றத்துடன் காணப்பட்ட கொல்கத்தா அணி10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை சேர்த்தது. அதற்குப் பின் களத்திற்கு வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களிலும், நிதிஷ் ராணா 54 ரன்களிலும், பேட் கம்மின்ஸ் 3 ரன்களிலும் வெளியேறினர். ஹைதராபாத் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரஸ்ஸல் 4 சிக்ஸர்களை விளாசி 49 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 1 ரன்னுடனும் பேட்ஸ்மேன்களாக களத்தில் உள்ளனர். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 175 ரன்களை குவித்தது.
ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார், மார்கோ ஜான்சன், ஜகதீஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.