IPL 2022 | தன் வினை தன்னைச் சுடும் - ஷமி பந்துவீச்சில் கேட்ச் தவறவிட்ட ஹர்திக் பாண்டியா

IPL 2022 | தன் வினை தன்னைச் சுடும் - ஷமி பந்துவீச்சில் கேட்ச் தவறவிட்ட ஹர்திக் பாண்டியா
Updated on
1 min read

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் பிடிக்கத் தவறியதை சுட்டிக்காட்டி சிலர் அவரை ஏளனம் செய்துள்ளனர்.

நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என சகலத்திலும் வல்லவரான அவர் அசத்தி வருகிறார். அது அந்த அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவி வருகிறது. கடைசியாக அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருந்தது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். இருந்தாலும், இதே போட்டியில் அவர் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பிற்காக சிலர் அவரை ஏளனம் செய்துள்ளனர்.

அதற்குக் காரணம், இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற போட்டியில் பாண்டியா விதைத்த வினைதான். ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ஹர்திக் பந்துவீசிய போது எதிரணி பேட்ஸ்மேன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிடிக்க தவறியிருப்பார் ஷமி. சக அணி வீரர் என்று கூட பார்க்காமல் களத்தில், கேமராவுக்கு முன்னர் கடும் கோபத்தில் திட்டியிருப்பார் பாண்டியா. அதனை அப்போதே நெட்டிசன்கள் கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், அதற்கடுத்த போட்டியில் பாண்டியா தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை சுட்டிக்காட்டி பலரும் தங்கள் கருத்துகளை சொல்லியுள்ளனர். அதே நேரத்தில் அதற்காக ஷமி, பாண்டியாவிடம் கோபப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in