Published : 12 Apr 2022 11:31 PM
Last Updated : 12 Apr 2022 11:31 PM

IPL 2022 | மஹீஸ் தீக்சனா, ஜடேஜா சுழலில் வீழ்ந்த பெங்களூரு - நடப்பு சீசனில் சென்னை அணி முதல் வெற்றி

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.

217 என்ற மெகா இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் சிறப்பான ஓப்பனிங்கை கொடுத்த பாப் டூ பிளஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் இணை இந்த முறை சோபிக்க தவறியது. மூன்றாவது ஓவரிலேயே இவர்கள் கூட்டணியை பிரித்தார் சென்னை அணியின் மிஸ்டரி ஆயுதம் மஹீஸ் தீக்சனா. 8 ரன்கள் எடுத்திருந்த டூ பிளஸ்சிஸ் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஜோர்டனிடம் கேட்ச் ஆகினார். இதன்பின் வந்த கோலி, ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை முகேஷ் சவுத்ரி அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

அடுத்த ஓவரிலேயே அனுஜ் ராவத்தும் 12 ரன்களில் ஹீஸ் தீக்சனா சூழலில் வீழ்ந்தார். இதனால், பெங்களூரு அணி தடுமாற்றம் கண்டது. எனினும் இதற்கடுத்த வந்த ஆல் ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல், சபாஷ் அஹமத் மற்றும் பிரபுதேசாய் சில ஓவர்கள் அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது அவரை எல்பிடபிள்யூ மூலம் நடையைக்கட்ட வைத்தார் கேப்டன் ஜடேஜா.

சபாஷ் அஹமத் மற்றும் பிரபுதேசாய் இருவரையும் மஹீஸ் தீக்சனா வெளியேற்றினார். சபாஷ் அஹமத் 41 ரன்களிலும், பிரபுதேசாய் 34 ரன்களும் சேர்த்திருந்தனர். 13வது ஓவரில் இருந்து 15 ஓவர் வரை மைதானத்தில் விக்கெட் மழை பொழிந்தது. ஏனென்றால், இவர்களுக்கு பிறகு வந்த ஹஸரங்கா மற்றும் ஆகாஷ் தீப் இருவரையும் அடுத்த பந்துகளில் ஜடேஜா டக் அவுட் செய்தார்.

இதனால் பெங்களூரு அணி தோற்கும் நிலைக்கு சென்றது. இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் பவுலர்களை பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி நம்பிக்கை கொடுத்தார். தினேஷ் கார்த்திக் காலத்தில் இருந்தால் வெற்றி என்ற நம்பிக்கை ஏற்பட்டது. 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அவரை பிராவோ லோ புலதாஸ் வீசி வெளியேற்றிய பிறகு தான் சென்னை அணி பெருமூச்சு விட்டது. இறுதிக்கட்டத்தில் சிராஜ் மற்றும் ஹேசில்வுட் இருவரும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி. சென்னை அணி தரப்பில் மஹீஸ் தீக்சனா 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், பிராவோ, முகேஷ் சவுத்ரி தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர். இந்த சீசனில் சென்னை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ருத்ராஜ் கெய்வாட்டும், ராபின் உத்தப்பாவும் சென்னை அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த ருத்ராஜை 3-வது ஓவரிலேயே ஹேசில்வுட் வெளியேற்றினார். பின்னர் வந்த மொயின் அலியை 6-வது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். இதனால் 3 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார் மொயின் அலி. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணி 60 ரன்களை சேர்த்திருந்தது.

அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே, ராபின் உத்தப்பாவுடன் வலுவான கூட்டணி அமைக்க இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறினர். 50 பந்துகளில் 88 ரன்களை குவித்திருந்த ராபின் உத்தப்பாவை, வனிந்து ஹசரங்கா வெளியேற்றினார். அடுத்து வந்த ஜடேஜா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து விட்டு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக்கட்டினார்.

அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 20-வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 46 பந்துகளை சந்திருந்த அவர் 96 ரன்கள் குவித்து மிரட்டினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 215 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில், ஹசரங்கா 2 , ஹேசில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x