IPL 2022 | சென்னையின் ஷிவம் துபே - உத்தப்பா கூட்டணி அதிரடி - பெங்களூரு அணிக்கு 217 ரன்கள் இலக்கு

IPL 2022 | சென்னையின் ஷிவம் துபே - உத்தப்பா கூட்டணி அதிரடி - பெங்களூரு அணிக்கு 217 ரன்கள் இலக்கு

Published on

மும்பை: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 216 ரன்களை குவித்தது. ஷிவம் துபே, ராபின் உத்தப்பா கூட்டணி நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு அதிரடி காட்டினர்.

15-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ருத்ராஜ் கெய்வாட்டும், ராபின் உத்தப்பாவும் சென்னை அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த ருத்ராஜை 3-வது ஓவரிலேயே ஹேசில்வுட் வெளியேற்றினார். பின்னர் வந்த மொயின் அலியை 6-வது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். இதனால் 3 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார் மொயின் அலி. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணி 60 ரன்களை சேர்த்திருந்தது.

அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே, ராபின் உத்தப்பாவுடன் வலுவான கூட்டணி அமைக்க இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறினர். 50 பந்துகளில் 88 ரன்களை குவித்திருந்த ராபின் உத்தப்பாவை, வனிந்து ஹசரங்கா வெளியேற்றினார். அடுத்து வந்த ஜடேஜா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து விட்டு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக்கட்டினார்.

அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 20-வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 46 பந்துகளை சந்திருந்த அவர் 96 ரன்கள் குவித்து மிரட்டினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 216 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில், ஹசரங்கா 2 , ஹேசில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in