Published : 12 Apr 2022 06:08 AM
Last Updated : 12 Apr 2022 06:08 AM

ரிட்டையர்டு அவுட் ஆகி சர்ச்சையை உருவாக்கிய அஸ்வின் - என்ன சொல்கிறது விதி?

அஸ்வின்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிட்டையர்டு அவுட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. 166 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் 18.2-வது ஓவரில் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினார். 23 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்திருந்தார் அஸ்வின்.

அஸ்வின் காயம் ஏதும் அடையாத நிலையில் வெளியேறியது அனைவரது மத்தியிலும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு பின்னால் ராஜஸ்தான் அணியின் திட்டம் இருந்ததை கேப்டன் சஞ்சு சாம்சனும், இயக்குநர் குமார் சங்ககராவும் ஒப்புக்கொண்டனர். அஸ்வின் சோர்வடைந்ததால் அந்த நேரத்தில் புத்துணர்ச்சியுடன் அதிரடியாக ஆடக்கூடிய வீரரை களமிறக்கினால் கூடுதலாக ரன்கள் கிடைக்கும் என ராஜஸ்தான் அணி கருதி உள்ளது.

அஸ்வின் வெளியேறிய பின்னர் களம் புகுந்த ரியன் பராக் 4 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 8 ரன் சேர்த்து இறுதிக்கட்ட பங்களிப்பை சிறப்பாக வழங்கினார். இந்த 8 ரன்கள் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் லக்னோ அணி தோல்வியடைந்த ரன்களின் வித்தியாசம் 3 மட்டுமே.

ஏது எப்படி ஆனாலும் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டையர்டு அவுட் ஆன முதல் வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தார் அஸ்வின்.

என்ன சொல்கிறது விதி?

அஸ்வின் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறியது பலரை ஆச்சரியப்படுத்தியது. எனினும் இது ஐசிசி விதி 25.4.3-ல் உள்ளதுதான். எனினும் இந்த விதி இருப்பது பற்றி பலருக்குத் தெரியாது. இதன்படி நோய், காயம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக பேட்ஸ்மேன் வெளியேறலாம். இதன்படி பேட்ஸ்மேன் ரிட்டையர்டு அவுட் என பதிவு செய்யப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x