இன்றைய யுத்தம்!- ஸ்பெயின்-நெதர்லாந்து

இன்றைய யுத்தம்!- ஸ்பெயின்-நெதர்லாந்து
Updated on
1 min read

உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய அணியான நெதர்லாந்தும் சந்திக்கின்றன. பிரேசிலின் சல்வடார் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று, கடந்த உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்க நெதர்லாந்து தீவிரமாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அணியில், கடந்த உலகக்கோப்பையில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த முறையும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆட்டம்தான் ‘பி’ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியைத் தீர்மானிக்கும்.

ஸ்பெயின் அணி 4-2-1-3 என்ற பார்மேட்டில் களமிறங்கும் எனத் தெரிகிறது. இகர் காசில்லஸ், அஸ்பிலிகியூட்டா, ரேமோஸ், பிக்கியூ, ஆல்பா உள்ளிட்டோர், ஆடும் லெவனில் இடம்பெறக்கூடும். கடந்த உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து ஸ்பெயினை உலக சாம்பியனாக்கிய இனியெஸ்டா இந்த முறையும் அந்த அணியின் தூணாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்பெயினுடனான இந்த ஆட்டம் முதல் போட்டி மட்டுமின்றி, கடந்த உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய போட்டியும் என்பதால், எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் நெதர்லாந்து தீவிரம் காட்டும். அர்ஜென் ராபன், வெஸ்லி ஸ்நீஜ்டர், ராபின் வான் பெர்ஸி என மூன்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நெதர்லாந்து அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணியின் மிகப்பெரிய பலமாகும்.

இந்த ஆட்டம் நெதர்லாந்து வீரர் வெஸ்லி ஸ்நீஜ்டருக்கு 100-வது போட்டியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in