

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், மும்பையில் தனது சிறு வயதில் பயிற்சிக்காக தினமும் பயணித்த பேருந்து பயணக் கதையை நினைவு கூர்ந்துள்ளார்.
சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் வலியும், வேதனையும் நிறைந்ததாகவே இருக்கும். ஒவ்வொரு சாதனையாளரும் பல தடைக்கற்களை உடைத்தே முன்னேறி வந்தவர்கள். அது அவர்களது வாழ்க்கை கதை சொல்லும் பாடம். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 16 வயதில் கிரிக்கெட்டில் களத்திற்குள் என்ட்ரி கொடுத்தவர். பின்னாளில் கிரிக்கெட் விளையாட்டில் அவர் எட்டிப் பிடிக்காத உயரங்களே இல்லை.
பலருக்கு உத்வேகம் அளிக்கும் அவரது கதை பல்வேறு தளங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அண்மையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் சச்சின். அதில் சிறு வயதில் தான் தினந்தோறும் பயிற்சி மேற்கொள்ள பயணித்த பேருந்துக்கு அருகே நின்று கொண்டு அது குறித்த சுவாரசியமான கதையை விவரிக்கிறார்.
“பல ஆண்டுகளுக்குப் பிறகு பஸ் நம்பர் 315-ஐ நான் பார்த்தேன். பாந்த்ரா தொடங்கி சிவாஜி பார்க் வரை செல்லும் பேருந்து இது. சிறு வயதில் பயிற்சி மேற்கொள்ள இதில் தான் நான் தினமும் செல்வேன். இந்தப் பேருந்தில் செல்லும் போது பயிற்சியை எப்போது தொடங்குவேன் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும்.
பயிற்சி முடித்த களைப்பில் மீண்டும் இதே பேருந்தில் வீடு திரும்புவேன். அப்போது பெரும்பாலும் பின் பக்க சீட்டில் ஜன்னல் ஓரம்தான் உட்காருவேன். காலியாக உள்ள பேருந்தில் காற்று வாங்கி கொண்டே பயணிப்பது அலாதி சுகம். சில நேரங்களில் ஒரு குட்டித்தூக்கம் கூட போட்டுள்ளேன். அது மிகவும் வேடிக்கையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் சச்சின்.
கிரிக்கெட் உலகில் 100 சதங்களை பதிவு செய்த ஒரே கிரிக்கெட் வீரரும் சச்சின் மட்டும்தான்.