IPL 2022 | 'சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நம்புகிறேன்' - சாம் கர்ரன்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரன்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரன்.
Updated on
1 min read

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார் சாம் கர்ரன்.

2020 மற்றும் 2021 சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடியவர் இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரர் சாம் கர்ரன். ஆல்-ரவுண்டரான இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்கவில்லை. மொத்தம் 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 337 ரன்கள் மற்றும் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அவர். இந்நிலையில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

“அணியுடன் இந்தச் சூழலில் நான் இல்லாதது எனக்கு வருத்தம் தான். அங்கு இருந்திருந்தால் சக வீரர்களுக்கு தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுத்திருப்பேன். சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நான் நம்புகிறேன். இது கொஞ்சம் கடினமான காரியம்தான். இருந்தாலும் சென்னை அணி அதை செய்து காட்டும். முதல் ஆறு போட்டிகள் முடிந்த பிறகே எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதை சொல்ல முடியும். சிஎஸ்கே வெற்றி பாதைக்கு விரைந்து திரும்ப வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார் சாம் கர்ரன்.

நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணியை ஜடேஜா தற்போது வழிநடத்தி வருகிறார். நடப்பு சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது சென்னை அணி. புள்ளிப்பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் சென்னை உள்ளது. இன்றைய போட்டியில் பத்தாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in