Last Updated : 25 Apr, 2016 09:38 AM

 

Published : 25 Apr 2016 09:38 AM
Last Updated : 25 Apr 2016 09:38 AM

ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சல்மான் கான் நியமிக்கப்பட்டதற்கு மில்கா சிங், யோகேஸ்வர் தத் கண்டனம்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப் பட்டதற்கு பிரபல மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத், மில்கா சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல் லெண்ணத் தூதராக சல்மான் கான் நேற்று முன்தினம் அறிவிக் கப்பட்டார். இந்த அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பி.டி.உஷா, மில்கா சிங் போன்றவர்கள் இந்திய விளையாட்டுத்துறைக்காக பல பணிகளை செய்துள்ளனர். இந்நிலையில் விளையாட்டுக்காக எதையும் செய்யாத ஒரு சினிமா கலைஞரை இந்திய அணியின் நல்லெண்ண தூதராக நியமித்தது சரியல்ல. யாராவது ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இந்தப் பதவியில் நியமித்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தடகள வீரரான மில்கா சிங்கும் சல்மான் கானின் நியமனத்தை கண்டித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மில்கா சிங் “இந்திய அணியின் நல்லெண்ண தூதராக சல்மான் கானை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது சரியல்ல. திரைத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஒரு விளையாட்டு வீரரை அவர்கள் நல்லெண்ண தூதராக நியமிப்பார்களா? சல்மான் கானை நல்லெண்ண தூதராக நியமிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். பி.டி.உஷா, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், அஜித் பால் போன்ற விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களை நல்லெண்ண தூதராக நியமிக்க வேண்டும்” என்றார். இந்நிலையில் குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் ஆகியோர் சல்மான் கானின் நியமனத்தை வரவேற்றுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x