

2011 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தன்னை கேப்டன் தோனி பந்துவீச சொன்னபோது நடுங்கிப் போனதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
இந்திய கிரிக்கெட் அணி 2011 உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அந்தத் தொடரில் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளார் ஹர்பஜன். உளவியல் பயிற்சியாளர் பேடி அப்டன் உடனான வலையொலி (பாட்காஸ்ட்) உரையாடலில் இதனை பகிர்ந்துள்ளார்.
“மொகாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இது நடந்தது. டிரிங்க்ஸ் பிரேக்கிற்கு பிறகு இரண்டாவது ஸ்பெல்லை வீசுமாறு கேப்டன் தோனி பணித்தார். உண்மையில் அப்போது நான் கொஞ்சம் நடுங்கிப் போனேன்.
அவர்கள் சிறப்பாக பேட் செய்து கொண்டிருந்த நேரம் அது. இருந்தாலும் பதற்றத்தை நான் வெளிக்காட்டவில்லை. இந்த ஒரு நாளுக்காக தான் இத்தனை நாள் பயிற்சி, போராட்டம் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆழமாக மூச்சை இழுத்து, உணர்ச்சிகளை புறம்தள்ளி, ஆட்டத்தில் கவனம் வைத்தேன். எனக்கு தெரிந்ததை சிறப்பாகச் செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தினேன்” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த உமர் அக்மல் விக்கெட்டை கைப்பற்றி இருப்பார் ஹர்பஜன். ஆட்டத்தின் 34-வது ஓவரின் முதல் பந்தில் கைப்பற்றிய விக்கெட் அது. அதன் பிறகு அஃப்ரிடி விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருப்பார் ஹர்பஜன்.