

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பாணியில் வெற்றியைக் கொண்டாடியுள்ளார் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி. டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின்போது அவர் அப்படி செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆட்டத்தின் வெற்றியை கொண்டாடிய லக்னோவின் இளம் வீரர் ஆயுஷ் பதோனியின் வெற்றிக் கொண்டாட்டம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அது இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் பாணியில் இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்திருப்பார் பதோனி. அதன்பிறகு அவர் தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இடம்பெற்றுள்ள தனது பெயரை சுட்டிக்காட்டும் வகையில் சைகை காண்பித்திருப்பார். பின்னர் முஷ்டியை முறுக்கியும் காண்பித்திருப்பார். இதே பாணியில் இதற்கு முன்னதாக கோலியும் வெற்றியைக் கொண்டாடியுள்ளார். 2019-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றியை கோலி அப்படி கொண்டாடியிருந்தார். அந்த ஆட்டத்தில் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருப்பார் கோலி.
நடப்பு ஐபிஎல் சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார் பதோனி. மொத்தம் 64 பந்துகளை எதிர்கொண்டு 102 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக அவர் எடுத்துள்ள ரன்கள் 54. இரண்டு முறை களத்தில் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்துள்ளார். 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த சீசனின் வளர்ந்து வரும் வீரர்களில் (எமெர்ஜிங் பிளேயர்) ஒருவராக அவர் மிளிர்கிறார்.