

சென்னை: விளையாட்டை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கொண்டிருப்பவர்கள் இரட்டை சகோதரிகளான நீட்டா மற்றும் நீரஜா. இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள்.
21 வயதான சகோதரிகள் இருவரும் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள். தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று, விளையாடி வருகின்றனர். விளையாட்டு பின்புலம் கொண்டது இவர்களது குடும்பம். இவர்களது உயரம் 5 அடி 10 அங்குலம்.
இந்தியாவுக்காக கடந்த 1994-இல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று வந்த கபடி அணியில் விளையாடியவரும், கபடி பயிற்சியாளருமான பாஸ்கரன் காசிநாதன் தான் இவர்களின் தந்தை. இவர்களது அம்மா பிரபா, பள்ளி மற்றும் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாடிய வீராங்கனை. சகோதரர் சூர்யா கூடைப்பந்து வீரர். இப்படியாக குடும்பம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் நிறைந்துள்ளனர்.
அவர்களைப் பார்த்து வளர்ந்த சகோதரிகள் இருவருக்கும் விளையாட்டின் மீது நாட்டம் வந்துள்ளது. முதலில் இருவரும் தடகள விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளனர். அவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது தான் உடற்பயிற்சி ஆசிரியர் கொடுத்த அறிவுரையை ஏற்று கூடைப்பந்து விளையாடத் தொடங்கியுள்ளனர். அங்கு தொடங்கியது இப்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடும் வீராங்கனைகளாக உருவாக்கியுள்ளது.
இருவரும் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இருவரும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்தும் உள்ளனர்.