

மும்பை: நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அபாரமாக பேட் செய்து அசத்தியிருந்தார் கொல்கத்தா வீரர் கம்மின்ஸ். இருந்தாலும் பயிற்சியின் போது கம்மின்ஸ் எதிர்கொண்ட எல்லா பந்திலும் போல்ட் ஆனார் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் விளையாடின. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. இரண்டாவது இன்னிங்ஸில் 101 ரன்கள் எடுத்து, ஐந்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது அந்த அணி. அப்போது களத்திற்கு வந்தார் பேட் கம்மின்ஸ். நடப்பு சீசனில் அவர் விளையாடும் முதல் போட்டி இது.
இருந்தும் 15 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து அடுத்த சில ஓவர்களில் ஆட்டத்தையே முடித்துக் கொடுத்தார் அவர். அதோடு ஐபிஎல் அரங்கில் அதிவேகமாக அரைசதம் குவித்த வீரர் என்ற சாதனையையூம் சமன் செய்தார். 14 பந்துகளில் அவர் 50 ரன்களை சேர்த்திருந்தார். இந்நிலையில் ஆட்டம் முடிந்ததும் அவரது அபாரமான இன்னிங்ஸ் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்தது.
“அற்புதம்! கம்மின்ஸ் கிரிக்கெட் பந்தை அவ்வளவு அழகாக அடித்து துவம்சம் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் நேற்று நான் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் எனக்கு பக்கத்தில் பயிற்சி செய்தார். அவர் எதிர்கொண்ட அனைத்து பந்துகளிலும் போல்ட் ஆனதை நான் பார்த்திருந்தேன். டைம்-அவுட் இடைவேளையின் போது வெங்கடேஷ் ஐயரை நிதானமாக ஆடும்படி சொல்லி இருந்தோம். அதே நேரத்தில் கம்மின்ஸை அடித்து ஆடுமாறு சொல்லி இருந்தோம். அதை அப்படியே அவர் செய்தார்” என சொல்லியுள்ளார்.
கொல்கத்தா அணி நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.