

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்ரமணியம் பத்ரிநாத், திறன் படைத்த தமிழகத்தின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.
“மொபைல் போன் துணையுடன் இன்று உலகை நம்மால் அணுக முடிகிறது. கிரிக்கெட் விளையாட்டிலும் தொழில்நுட்பம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இத்தகைய சூழலில் தொழில்நுட்பத்தின் ஊடாக திறன் படைத்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண உள்ளேன். அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளேன். நான் இதனை எனது சொந்த செலவில் முன்னெடுத்துள்ளேன். இது வணிகம் சார்ந்த முயற்சி அல்ல. நம் மாநில கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார் பத்ரிநாத்.
இதற்கான பணிகளை அவரது ‘CricIT Venture’ மூலம் மேற்கொண்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது திறனை மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்து அதனை www.cricitventures.com என்ற தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங் என எது வேண்டுமானாலும் அந்த வீடியோவில் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோக்கள் மூலம் திறன் படைத்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சென்னையில் பத்ரிநாத் பயிற்சி கொடுப்பார் என தெரிகிறது. மாவட்டங்களில் இருந்து வரும் வீரர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 1500-க்கும் கூடுதலான வீடியோ வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடல் அளவு உள்ள திறமை சாலிகளை அடையாளம் காணும் இந்த திட்டம் தமிழ்நாடு பிரீமியர் லீக் பயிற்சியாளராக செயல்பட்ட போது தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.