

கடந்த ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய பவுலர் தங்கராசு நடராஜனை இந்திய அணி ரொம்பவே மிஸ் செய்தததாக தெரிவித்துள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
2020-21 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடி இருந்தார் நடராஜன். கடந்த 2021 மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கடைசியாக நடராஜன் விளையாடியிருந்தார். அதன் பிறகு தோள்பட்டை மற்றும் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதால் அணியில் தனக்கான வாய்ப்பை இழந்திருந்தார். ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார்.
“நடராஜன் மீண்டும் களத்திற்கு திரும்பி உள்ளதால் எனக்கு மகிழ்ச்சி. டி20 உலகக் கோப்பையின்போது நாங்கள் அவரை மிஸ் செய்திருந்தோம். அவர் உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் இறுதி ஓவர்களில் (டெத் ஓவர்) சிறப்பாக பந்து வீசும் திறன் கொண்ட பவுலர். அவர் யார்க்கர்கள் ரொம்பவே ஸ்பெஷல். அதை கட்டுப்பாடுடன் வீசக் கூடியவர். எல்லோரும் எதிர்பார்ப்பதை விட மிகவும் வேகமாக அது பேட்டுக்கு வரும்” என விவரித்துள்ளார் ரவி சாஸ்திரி.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார் நடராஜன்.