

சான்சீயோன்: நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய பேட்மிண்டன் விளையாட்டு நட்சத்திரங்கள் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் என இருவரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். வரும் 10-ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது.
தென்கொரியாவின் சான்சீயோன் நகரில் உள்ள உள்ளரங்கில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை லாரன் லாமை 21-15 21-14 என நேர் செட் கணக்கில் வென்றார் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து. அண்மையில் அவர் ஸ்விஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை எதிர்கொள்கிறார் சிந்து.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசிய வீரர் டேரனை 22-20, 21-11 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் (சீட் 1) விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா சென், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருந்தார். இரண்டாவது சுற்றில் கிடாம்பி இஸ்ரேல் வீரரை எதிர்கொள்கிறார்.
ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் 20 வயதான மாளவிகா பன்சோட் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.