

17-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜப்பானும், தென் கொரியாவும் இணைந்து நடத்தின. 2002-ல் நடைபெற்ற இந்த போட்டிதான் ஆசியாவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியாகும். ஜப்பானின் 10 நகரங்கள், தென் கொரியாவின் 10 நகரங்கள் என 20 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்றது. வெற்றியைத் தீர்மானிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட கோல்டன் கோல் விதிமுறை இந்த உலகக் கோப்பையோடு கைவிடப்பட்டது.
பிரான்ஸ் வெளியேற்றம்
முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 0-1 என்ற கோல் கணக்கில் செனீகல் அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதன்பிறகு உருகுவேயுடன் 0-0 என டிரா செய்த பிரான்ஸ், கடைசி லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் தோல்வி கண்டது. ஒரு கோல்கூட அடிக்காத பிரான்ஸ், ஒரெயொரு டிராவுடன் ஏ பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து, முதல் சுற்றோடு போட்டியிலிருந்து வெளியேறியது.
போட்டியை நடத்திய நாடுகளில் ஒன்றான ஜப்பான் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் துருக்கியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. மற்றொரு நாடான தென் கொரியா அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவையும், பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியையும் தோற்கடித்தன. பின்னர் நடைபெற்ற 2-வது இடத்துக்கான ஆட்டத்தில் துருக்கி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்தது.
ஜெர்மனி 4-வது முறையாக தோல்வி
ஜப்பானின் யோகோஹமாவில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அந்த உலகக் கோப்பையின் தலைசிறந்த அணிகளான ஜெர்மனியும், பிரேசிலும் சந்தித்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோல் எதுவும் விழாத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் பிரேசிலின் ரிவால்டோ நீண்ட தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தையடித்தார்.
ஜெர்மனியின் கேப்டனும், கோல் கீப்பருமான ஆலிவர் கான் பந்தை தகர்க்க, அவருடைய கையில் இருந்து நழுவிய பந்து பிரேசிலின் ரொனால்டோவிடம் செல்ல, அவர் அதை கோலாக்கி, ஜெர்மனியின் உலகக் கோப்பை கனவை தகர்த்தார்.
இதையடுத்து 79-வது நிமிடத்தில் ரொனால்டோ தனது 2-வது கோலை அடிக்க, பிரேசில் 5-வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஜெர்மனி 4-வது முறையாக இறுதியாட்டத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையை இழந்த சோகத்தை தாங்க முடியாத ஜெர்மனி கேப்டன் ஆலிவர் கான் தேம்பி தேம்பி அழுத காட்சி மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
2002 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 64
மொத்த கோல் - 161
ஓன் கோல் - 3
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,705,134
கோலின்றி முடிந்த ஆட்டம் - 3
டிராவில் முடிந்த ஆட்டம் - 16
டாப் ஸ்கோர்
ரொனால்டோ (பிரேசில்) - 8
மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜெர்மனி) - 5
ரிவால்டோ (பிரேசில்) - 5
ரெட் கார்டு - 17
யெல்லோ கார்டு - 272