

உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்தே அஸ்வினை முழுமையாக தோனி பயன்படுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நேற்று ஐபிஎல் முதல் போட்டியில் ஒரேயொரு ஓவரை மட்டும் கொடுத்து விட்டு பிறகு ‘கட்’ செய்தது பற்றி தோனி விளக்கம் அளித்துள்ளார்.
லாவா மொபைல் போன் பிராண்டின் விளம்பரத் தூதராக தோனி அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறியதாவது:
"நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். நிறைய சூழ்நிலைகளில் அஸ்வின் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். முதல் 6 ஓவர்களாக இருந்தாலும், அல்லது இறுதி ‘ஸ்லாக்’ ஓவர்களாக இருந்தாலும், அஸ்வின் எந்த நேரத்திலுமே சிறப்பாக வீசக்கூடியவர்தான்.
இது உத்தியை வெளிப்படுத்துவது அல்லது மறைப்பது போன்ற ஒரு விஷயமே. அஸ்வின் ஒரு முதிர்ச்சியான பவுலர், எந்த நேரத்திலும் அவரால் வீச முடியும். மும்பை இந்தியன்ஸ் சில விக்கெட்டுகளை தொடக்கத்தில் பறிகொடுத்தவுடனேயே நடுவரிசை மற்றும் கீழ்-நடுவரிசை வீரர்களிடையே கடும் அழுத்தம் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும்.
மும்பை இந்தியன்ஸ் 30/4 என்று தடுமாறிக் கொண்டிருக்கும் போது அறிமுக லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வினைக் கொண்டு வர சரியான நேரம் இதுவே என்று நினைத்தேன். நீங்கள் போட்டியைப் பார்க்கும் போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இவர் அதிகம் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசாதவர் என்று. ஆனால் அவருக்கும் அழுத்தம் இருந்தது.
எனவே மும்பையின் இந்த நிலையில் முருகன் அஸ்வினைக் கொண்டு வந்து அவரது 4 ஓவர்களை முடித்து விட்டால், நீண்ட கால தெரிவாக விக்கெட் வீழ்த்தும் ஒரு வீச்சாளராக அவர் உருப்பெறுவது எனக்கு அவசியமாகப் பட்டது. எனவே அவருக்கு 4 ஓவர்களை இந்தத் தருணத்தில் கொடுத்து முடித்து விட்டால், 2வது 3-வது ஆட்டங்களில் அவருக்கு இது கூடுதல் தன்னம்பிக்கை அளிக்கும்.
அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையே இது. ஆனால் அதே வேளையில் எதிர்முனையிலிருந்து நாங்கள் நெருக்குதல் கொடுத்தோம், ரஜத் பாட்டியா அருமையாக வீசினார் (1/10), சூழ்நிலையை அவர் நன்றாகப் பயன்படுத்தினார், இதுதான் காரணம்.
அதன் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ஓவர் வீசினார், அதன் பிறகே நான் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் நல்ல தெரிவு என்று நினைத்தேன்.
இவ்வாறு கூறினார் தோனி.
முன்னதாக, பேட்டியை தொடங்கும் முன்பே தோனி நிபந்தனை விதித்தார்: நீங்கள் கேட்கும் கேள்வியின் தரத்தைப் பொறுத்து அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிக கேள்விகளுக்கு விடையளிப்பேன். அப்படி தரம் இல்லையெனில் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க மாட்டேன்” என்றார்.