Published : 07 Apr 2016 09:23 AM
Last Updated : 07 Apr 2016 09:23 AM

சிஎஸ்கே-வுக்கு மாற்றாக எந்த அணியும் இல்லை: டிவைன் பிராவோ கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றாக எந்த அணியையும் கருத முடியாது என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் டிவைன் பிராவோ தெரிவித்தார்.

சென்னையில் அல்டிமேட் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய வீரர்கள் பலர் குஜராத் அணியில் இருந்தாலும் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றாக அமைந்து விட முடியாது. ஒரே ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ்தான் இருக்க முடியும். எனினும் சென்னை அணிக்காக விளையாடிய நான் உட்பட ரெய்னா, ஜடேஜா, பிரண்டன் மெக்கலம் ஆகியோர் குஜராத் அணியில் இருப்பதால் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தோனியின் தலைமைப்பண்பை நிச்சயம் இழக்கிறேன். உலகக் கிரிக்கெட்டில் அவர் தலைசிறந்த கேப்டன். அதேவேளையில் சுரேஷ் ரெய்னா சிறந்த வீரர். கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவார். ரெய்னாவிடமும் கேப்டனுக்கான திறன்கள் உள்ளது. அவருக்கு அணியில் உள்ள வீரர்கள் முழு அளவில் உறுதுணையாக இருப்போம். கேப்டன் பதவியில் ரெய்னா திறனை வெளிப்படுத்துவதற்கு இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் நாங்கள் இந்தியாவை வென்ற சமயத்திலும் ரசிகர்கள் மைதானத்தில் எழுந்து நின்று எங்களுக்கு தெரிவித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது. நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் எங்கள் நாட்டில் இருந்து நாங்கள் புறப்பட்டோம்.

எனது சகோதரர் டேரன் பிராவோ டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகக் கோப்பையை புறக்கணித்தார். அந்த வகை போட்டிக் கான திறன் என்னிடம் இல்லை. நான் உலகக் கோப்பையை வென்ற சாம்பியனாகவே இருக்க விரும்பினேன். தற்போதைய சூழ்நிலையில் நான் ஐபிஎல் தொடரிலேயே கவனம் செலுத்த உள்ளேன். சந்தர்ப்பம் அமைந்தால் எதிர்காலத்தில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன்.

இவ்வாறு பிராவோ கூறினார்.

அல்டிமேட் மையம் சார்பில் மே 17ம் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னை அமிர் மஹால் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முன்னாள் வீரர்கள் ஹெர்ஷல் கிப்ஸ், குளுஸ்நர், கர்ட்னி வால்ஸ், நிக்கி போஜ், டேஷ்மான்ட் ஹைன்ஸ், டேவி ஜேக்கப்பஸ், டிரெக் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x