

மும்பை: ஐபிஎல் 15-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி. மிகுந்த த்ரில் அனுபவம் தந்த இந்தப் போட்டியின் 5 கவனம் ஈர்த்த தருணங்கள்...
> டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதற்கு ஏற்ப முதல் மூன்று ஓவர்களில் ஆர்சிபி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஆகாஷ் தீப் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கேகேஆர் வீரர் வெங்கடேஸ் ஐயர் தனது விக்கெட்டை இழந்தார்.
> ஆர்சிபி வீரர் சிராஜ் தனது இரண்டாவது ஓவரில் 4-வது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நேரடியாக சிராஜை நோக்கியே அடிக்க, அதனை சிராஜ் ஓடி வந்த வேகத்தில் பிடிக்கத் தவறினார். மேலும், பந்து சிராஜின் கணுக்காலில் பட்டது. பின்ன,ர் இதனால் மைதானத்தில் ரசிகர்கள் "ஓ" என குரல் எழுப்பினர். என்னதான் அந்த கேட்சை சிராஜ் தவறவிட்டிருந்தாலும், ஓவரின் இறுதி பந்தில் ரஹானேவின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.
> ஆர்சிபி வீரர் ஆகாஷ் தீப் வீசிய இரண்டாம் ஓவரில் தனது முதல் பந்தை சந்தித்த கேகேஆர் வீரர் நிதிஷ் ரானா சிக்சர் அடித்தார். மேலும், அடுத்த பந்தை ஆகாஷ் தீப் நோபால் வீசினார். இருப்பினும் நிதானத்தை தவற விடாத ஆகாஷ் தீப் தனது 5-வது பந்தில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.
சிறப்பு தருணம்: ஆர்சிபி வீரர் ஹர்சல் பட்டேல் தனது முதல் ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் டிம் சவுத்தியின் விக்கெட்டினை வீழ்த்தினார். அதேபோல் தனது இரண்டாவது ஓவரிலும் ஹர்சல் பட்டேல் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸலை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். ஆர்சிபி வீரர்களில் சிறப்பான பந்துவீச்சு மூலம் 18.5 ஒவர்களில் 128 ரன்களுக்கு கேகேஆர் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து விக்கெட்டுகளும் எடுக்கப்பட்ட முதல் போட்டி இதுவே.
> ஆர்சிபி வீரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில், ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ், முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் 3 ஓவர்களிலேயே ஆட்டமிழக்கச் செய்து கேகேஆர் வீரர்கள் அதிரடி காட்டினர். குறிப்பாக, டிம் சவுத்தியின் முதல் ஓவர் கடைசி பந்தில் டூபிளசிஸும் ஆட்டமிழக்க, அடுத்த ஓவர் உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். முக்கிய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.
> தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், ரூதர்போர்டு, சபாஸ் அகமத் ஜோடி இலக்கை இறுதி வரை கொண்டு சென்றது. குறிப்பாக ரஸ்ஸல் ஓவரில் இரண்டு சிக்சர்களை அகமத் அடித்து அசத்தினார். இறுதியில் வெற்றி பெற 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை அடுத்தடுத்து அடித்து, 19.2 ஓவர்களில் ஆர்சிபி அணியை வெற்றி பெறச் செய்து அசத்தினார். ஆக, போட்டி முழுவதுமே திக் திக் நிமிடங்கள் நிறைந்திருந்தன.