

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் லீக்கின் 5-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் கவனம் ஈர்த்த தருணங்கள்...
> போட்டியின் தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது முதல் ஓவரை வீசினார். ஐந்தாம் பந்தை வீசியபோது ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் அதனை அடிக்கச் சென்று, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் வீரர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய நேரத்தில் மூன்றாம் நடுவர், அதனை நோ பாலாக அறிவித்து ஒலி எழுப்பியதும் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
> முதல் 5 ஓவர்களுக்குள் உம்ரான் மாலிக் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அடுத்தடுத்து நோபால் வீசியதால் சன்ரைசர்ஸ் வீரர்கள் சோர்ந்தனர். இருப்பினும் ஷெப்பர்ட் வீசிய பந்தில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இதன்பின் சற்று நிதானித்து கொண்ட உம்ரான் மாலிக் தனது இரண்டாம் ஓவரில் பட்லர் விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் தங்களது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
> ஏற்கெனவே ராஜஸ்தான் அணி 200 ரன்கள் கடந்து இருந்த நிலையில், இறுதி ஓவரை வீச வந்த நடராஜன் தனது ஆக்ரோஷமான யார்க்கர் ஸ்பெல்லை வெளிப்படுத்தினார். இதனால் ரியான் பராக், ஹெட்மேயர் ஜோடி விக்கெட்களை ஒரே ஓவரில் நடராஜன் சாய்த்தார். இறுதி ஓவரை வீசிய நடராஜன் முதல் பந்தில் ஹெட்மெயரையும், இறுதி பந்தில் ரியான் பராக்கையும் வீழ்த்தினார் என்பது கவனிக்கத்தக்கது.
> 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன், பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரின் 4-ம் பந்தை அடிக்க முனைந்து எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் சென்றது. அவர் கேட்ச்சை மிஸ் செய்ய, உடனடியாக அருகில் இருந்த படிக்கல், சுதாரித்துகொண்டு பந்து கீழே விழாமல் சென்று கேட்ச் பிடித்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் மௌனம் நீடித்தது. இறுதியாக மூன்றாம் நடுவரிடம் முடிவினை வினவிய நிலையில், நூலிழை இடைவெளியில் அது கேட்ச் ஆனது தெரியவர, வில்லியம்சன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
> சன்ரைசர்ஸ் அணி தொடக்க வீரர்கள் பெரிதாக அணிக்கு வலு சேர்க்காத நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் - மார்க்ரம் ஜோடி குறைந்த பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16-வது ஓவரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் மற்றும் இரண்டு ரன் என கவுன்டர் நெயில் பந்து வீச்சை சிதறடித்தார். இதனால் 13 பந்துகளிலேயே 40 ரன்களை எட்டினார் வாஷிங்டன் சுந்தர். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியால் 149 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.