Published : 29 Mar 2022 10:33 PM
Last Updated : 29 Mar 2022 10:33 PM

'அந்த 30 பேப்பரை எழுதி டிகிரி வாங்கலாமே' - அம்மாவின் அறிவுரையால் பட்டப்படிப்பு முடித்த கேஎல் ராகுல்

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் கடந்த லாக் டவுனில் டிகிரி முடித்த கதையை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

2014ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார் கேஎல் ராகுல். இதுவரை 43 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தற்போது மூன்று ஃபார்மெட் கொண்ட இந்திய அணியின் முக்கிய தூண்களில் ஒருவர். ஐபிஎல்லில் லக்னோ அணியை வழிநடத்தி வரும் அவரின் பெயர் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் பட்டியலிலும் அடிபடுகிறது. அப்படிப்பட்டவர், கடந்த லாக் டவுன் காலத்தில் தான் தனது பட்டப்படிப்பு அதாவது டிகிரியை முடித்தார்.

தான் டிகிரி முடித்தன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யத்தை கேஎல் ராகுல் இப்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். "பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்" என்ற நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், "நான் டிகிரி முடித்தற்கு எனது தாயே முழு காரணம். டிகிரி வாங்காததற்காக பலமுறை அவர் என்னை திட்டியுள்ளார். கடந்த லாக் டவுனின் போதுகூட 30 பேப்பர்களை ஏன் எழுதக்கூடாது, சும்மா இருப்பதற்கு பதிலாக அதை எழுதி டிகிரி வாங்கலாமே என தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். இதனால் எங்களுக்குள் விவாதமே நடந்தது.

'கிரிக்கெட் விளையாடுவதைப் போல, 30 பேப்பர்கள் எழுதச் செல்ல வேண்டுமா?' எனக் கேட்டதற்கு உடனே, எனது தாயிடம் இருந்து "ஆமாம்'' என்பதே பதிலாக வந்தது. அதேபோல், இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடியதை விட, எனக்கு ரிசர்வ் வங்கி வேலை கிடைத்த போதே எனது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தியாவுக்காக நான்கு வருடங்கள் விளையாடியது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. மாறாக, மத்திய அரசு வேலை கிடைத்ததும் அவர்கள் சந்தோஷமாக இருந்தனர்.

இந்த சந்தோசத்திற்கு அவர்களின் பதில், 'இதுதான் நிலையானது. இந்த வேலையில் நல்ல சம்பளம் கிடைக்கும். விளையாட்டுக்கு பிறகு உன்னை நன்றாக கவனித்துக்கொள்ள இந்த வேலை பொருத்தமானது' என்பதாக இருந்தது" என்று புன்னகையுடன் பெற்றோர்கள் குறித்து பேசியுள்ளார் கேஎல் ராகுல்.

பொதுவாக, கல்விக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவர் கேஎல் ராகுல். இதனால் கிரிக்கெட்டில் நுழைய அவரது குடும்பத்தை நிறையவே சமாளிக்க வேண்டி இருந்துள்ளது. இதனையும் அந்தப் பேட்டியில் ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். "என் அப்பா, அம்மா இருவருமே கல்லூரி பேராசிரியர்கள். ஏன் முழு குடும்பமுமே, இன்ஜினியர்களாகவோ அல்லது டாக்டர்களாகவோ இருக்கிறார்கள். நானும் 10ம் வகுப்பு படிக்கும் வரை நன்றாக படித்தவன் தான்.

பொதுவாக பத்தாம் வகுப்பு முடித்த பின் வணிகவியல் அல்லது அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படும். எனது குடும்பத்தில் இதுவரை யாரும் வணிகவியல் பாடத்தை எடுத்ததில்லை. என்னால் அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாதது. இதுபோன்றோரு சங்கட்டமான நிலை தான் அப்போது எனக்கும் என் பெற்றோருக்கும் இருந்தது. அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாது என்ற இக்கட்டான நிலையை விளக்கியபோது எனது பெற்றோர்கள் புரிந்துகொண்டார்கள்" என்று தனது கடினமான நேரங்களை மீண்டும் நினைவுபடுத்தினார் கேஎல் ராகுல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x