IPL 2022 தருணங்கள் 5 | GT vs LSG - அண்ணன் என்னடா, தம்பி என்னடா! 

IPL 2022 தருணங்கள் 5 | GT vs LSG - அண்ணன் என்னடா, தம்பி என்னடா! 
Updated on
2 min read

மும்பை: லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் திங்கள்கிழமை நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 5 சுவாரஸ்ய தருணங்கள்...

> லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், டி-காக் என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட U19 இந்திய வீரர் ஆயுஷ் பதோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் போட்டியிலேயே அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அவர் அரைசதம் அடித்த தருணம், மிக முக்கியக் கொண்டாட்டமாக அமைந்தது.

> ஐபிஎல் 15வது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் மோதிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் இரு ஐபிஎல் களத்துக்கு புதிதானது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடாவும், ஆயுஷ் பதோனியும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் குஜராத் பந்துவீச்சை பயமில்லாமல், சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசிய ஒவ்வொரு பந்துமே அசத்தல் தருணம்தான்.

> 159 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணியில் வீரர்கள் அணிக்கு தேவையான ரன்களை சேர்த்த போதும், குறிப்பிட்ட நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இலக்கை எட்ட இறுதி ஓவர் வரை செல்ல வேண்டி இருந்தது. ராகுல் தெவாட்டியாவிற்கு உறுதுணையாக இருந்த அறிமுக வீரர் அபினவ் மனோகர் தனது பங்கிற்கு மூன்று பவுண்டரிகளை சேர்த்து அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார். இந்த அபினவ் மனோகர் சில மாதங்கள் முன்பே தொழில்முறை கிரிக்கெட் வீரராக அடியெடுத்து வைத்தவர். கர்நாடக பிரீமியர் லீக்கில் இவரின் சிறப்பான ஆட்டம் ஐபிஎல் வரை கொண்டு வந்தது. அதன்படி தனது முதல் ஆட்டத்திலும் கவனம் ஈர்த்துள்ளார்.

> இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை அவரது அண்ணனும், லக்னோ சுழற்பந்து வீச்சாளருமான குர்னல் பாண்டியா எடுத்தார். சக அணி வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, விக்கெட்டை வீழ்த்திய குர்னல் பாண்டியா சற்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் கொண்டாட்டமின்றி தயக்கத்துடன் அமைதியை கடைபிடித்தார். பரோடா மற்றும் 2016-ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக ஒன்றாக விளையாட்டிக் கொண்டிருந்த பாண்டியா சகோதரர்கள் இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடுவது இதுவே முதல் முறை.

> குஜராத் இறுதிக்கட்டத்தில் 2 ஓவர்களுக்கு 20 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. களத்தில் இருந்த அறிமுக வீரர் அபினவ் மனோகர் மற்றும் ராகுல் தெவாட்டியா 19-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் ஆட்டத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், இறுதி ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு அடித்து வெற்றியை உறுதி செய்தார் அபினவ் மனோகர். த்ரில் நோக்கி சென்ற ஆட்டத்தின் போக்கை அவர் தில்லாக தன் அணி வசம் மாற்றிய தருணம் மிகச் சிறப்பான ஒன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in