

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் இன்று மாலை கனடா அணியுடன் மோதுகிறது.
மலேசியாவின் இபோ நகரில் 25-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான இந்திய அணி இரு ஆட்டத்தில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தட்டுத்தடுமாறியே வெற்றி பெற்றது. பலவீனமாக இருந்த தடுப்பாட்ட திறனால் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைய நேரிட்டது.
இந்நிலையில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.05 மணிக்கு நடைபெறுகிறது.
நடுகள வீரர் மன்பிரித் சிங் இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். ஜப்பானுக்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மன்பிரித் சிங்கின் தந்தை இறந்ததால் உடனடியாக மன்பிரித் தாயகம் திரும்பினார். இறுதிச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து நேற்று பயிற்சிகள் மேற்கொண்டார்.
கனடா அணிக்கு இன்றைய போட்டி 4-வது ஆட்டமாகும். அந்த அணி ஜப்பானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. 1-3 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. நியூஸிலாந் துக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்திருந்தது. 4 புள்ளிகளை பெற்றுள்ள கனடா புள்ளிகள் பட்டி யலில் 3-வது இடத்தில் உள்ளது.
மன்பிரித் சிங் இன்று களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். சிறந்த தடுப்பாட்ட வீரரான அவர் இந்திய அணியின் யுக்திகளை களத்தில் செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றக்கூடும். இந்திய அணி கடைசியாக கனடாவுடன் கடந்த ஆண்டு அஸ்லான் ஷா கோப்பையில் மோதியிருந்தது. இதில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
போட்டி தொடர்பாக கனடா அணியின் பயிற்சியாளர் அந்தோனி பார்ரி கூறும்போது, ``இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் கடினமாகவே இருக்கும்.
இந்திய வீரர்களுக்கு தகுந்தபடி விளையாட திட்டம் வைத்துள்ளோம்.'' என்றார்.