

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம்24-ம் தேதி போர் தொடுத்தது. அன்று முதல் சுமார் 30 லட்சம் பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா.அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உக்ரைன் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதம் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வியைப் பெற தனது அறக்கட்டளை வாயிலாக ‘வார் சைல்டு ஹாலந்து’ என்ற அமைப்புக்கு ரூ.3.79 கோடி நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோஜர் பெடரர் தனது ட்விட்டர் பதிவில்,“உக்ரைனில் இருந்து வரும்புகைப்படங்களைப் பார்த்து நானும் எனது குடும்பத்தினரும் திகிலடைகிறோம், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக மனம் உடைந்துள்ளோம். நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம். உக்ரைனில் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வழங்குவோம். சுமார் 60 லட்சம் உக்ரேனிய குழந்தைகள் தற்போது பள்ளியை விட்டு வெளியே உள்ளனர். அவர்களுக்கு கல்விக்கான அணுகலை வழங்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை சமாளிக்க அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம். ரோஜர் பெடரர் அறக்கட்டளை மூலம், உக்ரேனியக் குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர, ‘வார் சைல்டு ஹாலந்து’ அமைப் புக்கு நன்கொடையாக ரூ.3.79 கோடி வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.