

லாகூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகளை ஏன் நேரில் காண வரவில்லை என்பதை விளக்கியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிந்தது. இதில், இரண்டு போட்டிகளும் டிரா செய்யப்பட்டன. இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் தோல்வியை தவிர்த்தது அந்த அணி.
கேப்டன் பாபர் ஆஸமின் ஆட்டத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதில், "உலகத் தரம் வாய்ந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடிய பாபர் ஆஸமுக்கு எனது வாழ்த்துக்கள். இக்கட்டான சூழலில் கேப்டன்ஷிப் இன்னிங்ஸ் விளையாடி அசத்தினார். சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்திய அணியின் மற்ற வீரர்கள், குறிப்பாக ரிஸ்வான் மற்றும் ஷஃபிக் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள்" என்ற இம்ரான் கான், தனது அடுத்த ட்வீட்டில் "துரதிஷ்டவசமாக என்னால் இந்தப் போட்டியைப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், வேறொரு மேட்ச் பிக்ஸிங் மூலமாக எனக்கு எதிராக எனது வீரர்களை இழுக்கும் பணி நடந்து வருகிறது. நான் அதனை மற்றொரு முன்னணியில் அதனை எதிர்த்து போரிட்டு வருகிறேன்" என்று தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழலை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்திற்கு இம்ரான் கான் அரசு தான் காரணம் என்று அவரின் கட்சியைச் சார்ந்த 24 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளனர். இதனால், பாகிஸ்தான் அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இதையடுத்து இம்ரான் கான் தனது நிலையை விளக்கி அப்படி ட்வீட் செய்துள்ளார்.