கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆல் இங்கிலாந்து ஓபன்: சாய்னா, சிந்து இரண்டாம் சுற்றில் தோல்வி

Published on

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்து இந்திய வீராங்கனைகள் சாய்னா மற்றும் சிந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நாக்-அவுட் முறையில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் வெற்றிபெற்ற சாய்னா நேவால் மற்றும் சிந்து ஆகியோர் இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினர்.

இந்த நிலையில், பர்மிங்காமில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவிற்கான இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை எதிர்கொண்டார். இதில், 21-14, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை சாய்னாவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை யமகுச்சி வெற்றிபெற்றார். முதல் இரண்டு செட்களில் இருவருமே தலா ஒரு செட்டை வென்றனர். வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சி ஆதிக்கம் செலுத்தினார். அவரிடம் போராடிய சாய்னா தோல்வியைத் தழுவினார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை தகாஹாஷி எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்களில் இருவருமே தலா ஒரு செட்டை வென்றனர். இதனையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் ஜப்பான் வீராங்கனை போராடி வெற்றி பெற்றார். இதனால், 21-19, 16-21, 21-17 என செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை தகாஹாஷி அடுத்த சுற்று போட்டிக்கு முன்னேற, சிந்து தோல்வியை தழுவினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in