Last Updated : 11 Apr, 2016 09:50 AM

 

Published : 11 Apr 2016 09:50 AM
Last Updated : 11 Apr 2016 09:50 AM

மும்பை அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்: ஹர்பஜன் சிங் கருத்து

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணி தோற்றதற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரும் சொற்ப ரன்களின் அவுட் ஆன நிலையில் ஹர்பஜன் சிங் மட்டும் உறுதியாக ஆடி 45 ரன்களைக் குவித்தார். புனே அணியில் இஷாந்த் சர்மா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆடிய புனே அணி ஆரம்பம் முதலே உறுதியுடன் ஆடி வெற்றிக்கு தேவையான ரன்களை சிக்கல் இல்லாமல் எட்டிப்பிடித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 42 பந்துகளில் 66 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ பிளெஸ்ஸி 34 ரன்களைச் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஆடவந்த பீட்டர்சன் 21 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். புனே அணி 14.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது. புனே அணிக்காக ஆடி அரைசதம் எடுத்த ரஹானே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவறான ஷாட்கள்

இந்த ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைய ஆட்டத்தில் எங்கள் பேட்டிங் பலவீனமாக இருந்தது. பேட்டிங்குக்கு சாதகமான மும்பை ஆடுகளத்தில் எங்கள் பேட்ஸ்மேன் கள் பலரும் தவறான ஷாட்களை ஆடி அவுட் ஆனார்கள் இதுவே எங்கள் தோல்விக்கு காரணமாகும். முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி களைக் குவிக்க முயல்வோம்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

கெவின் பீட்டர்சன்

ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:

முதல் போட்டியிலேயே சிறப் பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 170 முதல் 180 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் மும்பை அணியை 121 ரன்களில் கட்டுப்படுத்தினார்கள். எங்கள் அணியின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியமானது. ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, மிட்செல் மார்ஷ், ரஜத் பாட்டியா, முருகன் அஸ்வின் ஆகிய அனைவரும் சிறப்பாக பந்துவீசினர்.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுடன் ஆடும் அனுபவம் இனிமையாக இருந்தது. நாங்கள் இருவரும் ஆடும்போது என்னிடம் பேசிய அவர், “நீ அடித்து ஆடு. நான் ஒவ்வொரு ரன்களாக எடுத்து நீ அதிக பந்துகளை எதிர்கொள்ள வாய்ப்பளிக்கிறேன்” என்று கூறினார். அவரைப் போன்ற ஒருவர் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x