ரூ.100 கோடி செலவில் மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ.100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வரும் ஜுலை மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரஷ்யா, உக்ரைன் போர்சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாஸ்கோவில் நடைபெறாது என சர்வதேச செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து போட்டியை நடத்தும் உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டது. இதற்கான ஏலத்தில் போட்டியை நடத்துவதற்கான இடமாக சென்னை நகரை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்வுசெய்தது. இதன்படி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாத இறுதியில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின்தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்ஜெய் கபூர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார், போட்டி இயக்குநர் பரத்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஞ்ஜெய் கபூர், பரத்சிங் சவுகான் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:
1927 முதல் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. எனினும் வரலாற்றில் முதல் முறையாக தற்போதுதான் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. அதுவும் செஸ் போட்டியின் தலைநகரமான சென்னை நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெறும். வெள்ளிக்கிழமை இரவுக்குள் (நாளை) போட்டி நடைபெறும் தேதியை சர்வதேச செஸ் கூட்டமைப்பு இறுதி செய்து அறிவிக்கும். இந்த போட்டிக்காக ரூ.100 கோடி செலவிடப்படுகிறது. போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு நிர்வாகம் விரைவாக செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்முறை 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ளதால் இந்தியாவில் இருந்து கூடுதலாக ஒரு அணி கலந்து கொள்ளும். அந்த வகையில் இந்தியா சார்பில் 3 அணிகள் பங்கேற்கும். இதற்கான வீரர்கள் தேர்வு, ரேங்கிங் அடிப்படையில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பெருமையான தருணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது தமிழகத்துக்கு பெருமையான தருணம். உலகெங்கிலும் இருந்து வரும் ராஜாக்களையும், ராணிகளையும் சென்னை நகரம் அன்போடு வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் பேசும்போது, "44-வது உலக செஸ்ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடுபெற்றுள்ளது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம்.
விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஆற்றல், திறமை, அழகு என நிறைய இருக்கும். அதிலும் செஸ் விளையாட்டு என்றால் விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், காண்பவர்கள் பதற்றத்தோடும் பங்கேற்கும் ஓர் அற்புதமான விளையாட்டு. இப்படிப்பட்ட அற்புதமான செஸ் விளையாட்டுக்கும் தமிழகத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, இன்றைக்கு பிரக்ஞானந்தா வரையில், தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டு வருகிறது தமிழ்நாடு.
இந்நிலையில், சுமார் 150-க்கும் மேற்பட்ட உலகநாடுகள் பங்கேற்க இருக்கும் செஸ் விளையாட்டுப் போட்டி, இதுவரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளில் மிகப்பெரியதாக அமைய உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய பன்னாட்டு செஸ் அமைப்புக்கும், இந்திய செஸ் அமைப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விருந்தோம்பலுக்கும், பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்வதற்கான ஒரு நிகழ்வாக இது நிச்சயம் அமையும். உலக செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக நடத்தும். உலக விளையாட்டு வீரர்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம்" என அவர் கூறியுள்ளார்.
