

சென்னை: 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலி பேசியது: "தமிழகம் உலக அரங்கில் ஒரு மைல்கல்லாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வை இப்போது பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அந்தச் செய்தி என்னவென்றால், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம்.
விளையாட்டுப் போட்டிகள் என்றாலே, ஆற்றல், திறமை, அழகு என நிறைய இருக்கும். அதிலும் செஸ் விளையாட்டுப் போட்டி என்றால், விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், காண்பவர்கள் பதற்றத்தோடும் பங்கேற்கும் ஓர் அற்புதமான விளையாட்டு. இப்படிப்பட்ட அற்புதமான செஸ் விளையாட்டுக்கும் தமிழகத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கு.
உலகின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, இன்றைக்கு பிரக்ஞானந்தா வரையில், தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டு வருகிறது தமிழ்நாடு.
இந்த நிலையில், சுமார் 150-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பங்கேற்கவிருக்கும் செஸ் விளையாட்டுப் போட்டி, இதுவரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளில் மிகப்பெரியதாக அமையவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய பன்னாட்டு செஸ் அமைப்பிற்கும், இந்திய செஸ் அமைப்பிற்கும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விருந்தோம்பலுக்கும், பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற தமிழர்களோட பெருமைகளை உலகறியச் செய்வதற்கான ஒரு நிகழ்வா இது நிச்சயம் அமையும். உலக செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக நடத்துவோம். உலக விளையாட்டு வீரர்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றோம்" என்று அவர் கூறியுள்ளார்.