

புதுடெல்லி: ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 39 பதக்கங்களை வென்றது. கடைசி நாளில் சென்னையைச் சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.
ஜோர்டானின் அம்மான் நகரில் ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்றுமுன்தினம் இளையோருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்தவிஷ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் எர்கெஷோவ்பெக்ஸாட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் 63.5கிலோ எடைப் பிரிவில் சோனிப்பட்டைச் சேர்ந்த வன்ஷாஜ் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானில் ஜாவோகிர் உம்மாத லீவ்வை தோற்கடித்து தங்கம் வென்றார்.
92 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமன் சிங் பிஷ்த் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இறுதிசுற்றில் அவர், 1-4 என்றகணக்கில்ஜோர்டானின் சைஃப்அல்-ரவாஷ்தேவிடம் தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் நிவேதிதா கார்கி(48 கிலோ), தமன்னா (50 கிலோ), ஷாஹீன் கில் (60 கிலோ), ரவீனா (63 கிலோ), முஸ்கான் (75 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
51 கிலோ எடைப் பிரிவில் ராமன், 54 கிலோ எடைப் பிரிவில்ஆனந்த் யாதவ், 75 கிலோ எடைப்பிரிவில் தீபக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இளையோர் பிரிவில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 23 பதக்கங்களுடன் முதலிடமும், கஜகஸ்தான் 22 பதக்கங்களுடன் 2-வது இடமும் பிடித்தன.
ஜூனியர் பிரிவில் வினி (50 கிலோ), யாஷிகா (52 கிலோ), நிகிதா சந்த் (60 கிலோ), வைதி (57 கிலோ), ஷிருஷ்டி சாத்தே (63 கிலோ), ருத்ரிகா (75 கிலோ), கிரிஷ் பால் (46 கிலோ), யஷ்வர்தன் சிங் (60 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். ஜூனியர் பிரிவில் இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி,6 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 2-வது இடம்பிடித்தது. ஒட்டுமொத்தமாக இந்தியா இந்தத் தொடரில் 15 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலம் என 39 பதக்கங்கள் வென்று குவித்தது.