Last Updated : 18 Apr, 2016 06:41 PM

 

Published : 18 Apr 2016 06:41 PM
Last Updated : 18 Apr 2016 06:41 PM

அணிக்கு அல்ல.. பணத்திற்கு மட்டுமே விசுவாசமாக உள்ளன: டி20 லீக் தொடர்கள் குறித்து ஸ்டீவ் வாஹ்

உலகம் முழுதும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் பணத்திற்கே விசுவாசமாக உள்ளன, அணிக்கு விசுவாசமாக இருப்பதில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

பெர்லினில் லாரியஸ் ஸ்போர்ட்ஸ் அவார்ட் நிகழ்ச்சியில் இந்திய ஊடகவியலாளர்களுடன் நடந்த உரையாடலில் ஸ்டீவ் வாஹ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதற்கு மட்டுமே நேர்மையாக இருப்பதால் அணிகள் 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு சமச்சீரான அணியை கண்டுபிடித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஓரளவுக்கு 3 வடிவத்துக்குமான அணிகளில் சமநிலையை பேண முடிந்துள்ளது.

பணமழை டி20 கிரிக்கெட் தொடர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தினால் நாட்டுக்காக ஆடும் கடமை குறித்த விசுவாசம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

அனைத்து வடிவங்களிலும் ஒரே அணி நம்பர் 1-ஆக இருப்பது சாத்தியமேயல்ல, அது எதார்த்தமும் அல்ல. பிரெண்டம் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார், ஆனால் அவரிடம் இன்னும் 3-4 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மீதமுள்ளது. தற்போது குடும்பத்திற்காக அவர் டி20 லீகுகளில் ஆடி வருகிறார். இது சரிதான். மொத்தமாகப் பார்த்தால் தன் நாட்டு அணிக்கு விசுவாசமாக இருப்பது என்பது வீழ்ச்சியடைந்து வருகிறது. பணத்திற்கு மட்டுமே விசுவாசம் அதிகரித்துள்ளது. நான் வீர்ர்களைக் குறைகூறவில்லை, ஆனால் ரசிகர்களுக்கு இது போதுமானதல்ல.

மே.இ.தீவுகளை எடுத்து கொள்ளுங்கள், டி20 கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் டெஸ்ட் போட்டிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை, ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை பாராட்டுகிறேன். என்றார் ஸ்டீவ் வாஹ்.

இவரது உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்தான் நம்பர் 1. ஆனால் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு கால நீட்சி உண்டு. டுவெண்டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் கூறுகின்றனர் கடந்த உலகக்கோப்பை இறுதி அபாரம் என்று, ஆனால் கடைசி 4 பந்துகள்தான் அதில் கிரேட். மற்றபடி இறுதிப் போட்டி வெறும் சவசவ. அது ஒரு மோசமான இறுதிப் போட்டி என்றே நான் கருதுகிறேன்.

டுவெண்டி 20 கிரிக்கெட் போகிற போக்கைப் பார்த்தால் ஒரு லாட்டரியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உண்மையான ஒரு அபாயம். கிரிக்கெட் என்பது 20 ஒவர்களுக்கும் மேலானது. ரசிகர்கள் விரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது, ஆனால் ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளையும் விரும்பிப் பார்க்கின்றனர். இங்கிலாந்தில் ஒவ்வொரு பெரிய டெஸ்ட் தொடரும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்க்கவே செய்கின்றன. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்திலும் இப்படித்தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றி வீரர்கள்தான் ரசிகர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். வீரர்களுக்கு அத்தகைய கடமை உணர்வு தேவை. ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் இதே கதி நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, கிரிக்கெட் நிர்வாகம் இதற்கு ஏதாவது செய்தாக வேண்டியது அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x