Published : 14 Mar 2022 06:04 PM
Last Updated : 14 Mar 2022 06:04 PM

இலங்கையை 238 ரன்களில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா

பெங்களூரு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 35.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

பின்னர், 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 68.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பந்த் 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 87 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் விளாசினர். மயங்க் அகர்வால் 22, ரோஹித் சர்மா 46, ஹனுமா விகாரி 35, விராட் கோலி 13, ஜடேஜா 22, அஸ்வின் 13, அக்சர்படேல் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை தரப்பில் ஜெயவிக்ரமா 4, எபுல்டேனியா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து 447 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, இன்று தொடர்ந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை நிதானம் காட்டியது. ஆனால், பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

திமுத் கருணரத்னே மிகச் சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். அவர் 175 பந்துகளை எதிர்கொண்டு 107 ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக நின்ற குசல் மெண்டிஸ் 60 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஏனையோர் மிகச் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ரிஷப் சாதனை: 2-வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 பந்தில் அரை சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்திருந்த இந்திய வீரர்களில் கபில் தேவின் சாதனையை (30 பந்துகள்) முறியடித்தார் ரிஷப் பந்த்.

இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x