Published : 13 Mar 2022 07:43 PM
Last Updated : 13 Mar 2022 07:43 PM

பெங்களூரு டெஸ்ட்: ரிஷப்பின் அதிரடி, ஸ்ரேயாஷின் நிதானம் - வலுவான நிலையில் இந்திய அணி

பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 380 ரன்களுக்கு மேல் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்போட்டி பகலிரவாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 59.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. குஷால் மெண்டிஸ் 2, திமுத் கருணாரத்னே 4, லகிரு திமான் 8, ஏஞ்சலோ மேத்யூஸ் 43, தனஞ்ஜெயா டி சில்வா 10, ஷாரித்அசலங்கா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். திக்வெலா 12, எபுல்டேனியா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3, ஷமி 2, அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நான்கே ஓவர்களிலேயே இலங்கையின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்தனர் இந்திய பௌலர்கள். பும்ரா மற்றும் அஸ்வின் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 36வது ஓவர்களில் 109 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதான துவக்கம் கொடுத்தது.

ஆட்டத்தின் 11வது ஓவரில் 22 ரன்கள் எடுத்த நிலையில் எபுல்டேனியா பந்துவீச்சில் மயங்க் அகர்வால் முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் ரோஹித், ஹனுமா விஹாரி இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரோஹித் சர்மா 46 ரன்களுக்கு அவுட் ஆக அவரைத் தொடர்ந்து விஹாரியும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விராட் கோலி 13 ரன்களில் அவுட் ஆக, ரிஷப் பந்த் அதிரடி காட்டினார். 31 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் அவரும் விக்கெட்டை பறிகொடுக்க ஸ்ரேயாஷ் ஐயர் 47 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 18 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

இலங்கை அணியை விட 380 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x